Home வரலாறு டைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள்!

டைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள்!

பிரிட்டனின் ஆடம்பர பயணிகள் கப்பலான டைடானிக் அட்லாண்டிக் பெருங்கடலில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூழ்கியபோது அதனுடன் ஆயிரக்கணக்கான மக்களும் கடுங்குளிரான நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மூழ்கிய கப்பலிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே ஒரு உயிர்காக்கும் படகு, அங்குத் தப்பியவர்கள் யாரேனும் உள்ளனரா எனப் பார்க்க திரும்பி வந்தபோது சீன இளைஞர் ஒருவர் மரக்கதவு ஒன்றை பிடித்து மிதந்து கொண்டிருந்தார். குளிரில் அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். அதிசயம் என்ன வென்றால் அவர் உயிருடன் இருந்தார்.

அந்த சீன இளைஞரின் பெயர் ஃபாங் லாங். இவர் டைடானிக் கப்பலில் தப்பிப் பிழைத்த ஆறு சீனர்களில் ஒருவர். இவர் தப்பித்த அந்த காட்சிதான் புகழ்பெற்ற டைடானிக் படத்தின் நாயகி தப்பிப்பது போன்று அமைக்கப்பட்டது.

ஆனால் சீனர்கள் டைடானிக் கப்பலிலிருந்து தப்பிப் பிழைத்த பிறகு அவர்களின் துயரம் முடிந்துவிடவில்லை.

அவர்கள் உயிர்பிழைத்து நியூயார்க்கின் எல்லிஸ் தீவில் உள்ள குடியேறிகள் ஆய்வு நிலையத்திற்கு வந்தனர் அதன்பிறகு 24 மணிநேரத்திற்குள் சீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் கடுமையான குடியேறிகள் சட்டம் ஒன்றின் கீழ் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த ஆறு பேரும் வரலாற்றிலிருந்து மறைந்துவிட்டனர். ஆனால் தற்போது சீனாவில் தயாரான தி சிக்ஸ் என்ற ஆவணப்படம் ஒன்றம் மூலமாக இவர்கள் குறித்த அடையாளமும் வாழ்க்கையும் வெளியாகியுள்ளது. அதாவது கிட்டதட்ட 109 ஆண்டுகளுக்கு பிறகு.

இவர்களின் கதை டைடானிக் கதைக்கும் அப்பாற்பட்டது. இவர்களின் கதையில் தாக்கம் செலுத்தியது இனப்பாகுபாடு மற்றும் குடியேறிகளுக்கு எதிரான மனப்பான்மை. அதுதான் இன்றளவும் அமெரிக்காவில் அதிர்வலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

யார் அந்த சீனர்கள்?

தப்பிப் பிழைத்த அந்த ஆறு பேர் லி பிங், ஃபாங் லாங், சாங் சிப், ஆ லாம், சுங் ஃபூ மற்றும் லி ஹீ. அவர்கள் கரீபியனுக்கு சென்று கொண்டிருந்த கடலோடிகள் என நம்பப்படுகிறது. இவர்கள் “அனைவரும் சேர்ந்தே வரலாற்றிலிருந்து காணாமல் போய்விட்டனர்” என்கிறார், பிரிட்டனை சேர்ந்த தி சிக்ஸ் படத்தின் இயக்குநரான ஆர்தர் ஜோன்ஸ்.

இந்த தப்பிப் பிழைத்த சீனர்களின் பெயர்கள் பயணிகளின் பட்டியலில் இருந்தது. மேலும் டைடானிக் மூழ்கிய செய்திகளிலும் இவர்களின் பெயர்கள் இருந்தன.

ஆனால் தப்பிப் பிழைத்த பிறரை போல இவர்கள் பத்திரிகைகளால் பாராட்டப் பெறவில்லை. மாறாக எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டனர். இதற்கு காரணம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் சீனர்களுக்கு எதிராக இருந்த மனப்பான்மை என்கின்றனர் வரலாற்று நிபுணர்களும், ஆய்வாளர்களும்.

டைடானிக் கப்பல் மூழ்கிய பிறகு வந்த தி ப்ருக்லின் டைய்லி ஈகிள் பத்திரிகையில் அந்த “உயிரினங்கள்” ஆபத்துக்கான அறிகுறிகள் முதலில் தெரிந்தவுடன் உயிர்காக்கும் படகிற்குள் வந்து சீட்டுக்கு அடியில் மறைந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஆவணப்பட குழுவின் ஆராய்ச்சி குழு அதை உண்மையில்லை என்கிறது.

அவர்கள் சீனாவின் உயிர்காக்கும் படகின் மாதிரியை உருவாக்கினர் மேலும் சீனர்களால் இதற்குள் மறைந்து கொள்வது இயலாத ஒன்று என ஆய்வுக் குழு கண்டறிந்தது. “இந்த நிலை இன்றளவும் நீடிக்கிறது. ஊடகங்களிடம் குடியேறிகள் பலியாடுகள் ஆவதை நாம் காண முடிகிறது” என்கிறார் ஜோன்ஸ்.

வேறு சில ஊடகங்கள், உயிர்காக்கும் படகில் முதலில் ஏறுவதற்காக பெண்களை போல சீனர்கள் வேடமணிந்து கொண்டனர் எனக் குற்றம் சுமத்துகிறது.

ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் டைடானிக் குறித்த வரலாற்று நிபுணர் டிம் மால்டின்.

“இது ஊடகங்கள் மற்றும் பொதுமக்களால் உருவாக்கப்பட்ட செய்தி” என தெரிவித்தார் அவர். டைடானிக் மூழ்கிய போது பெண்கள் மற்றும் குழந்தைகளே முதலில் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற பொது மக்களின் எண்ணத்தை ஒட்டியதாக இந்த வதந்தி இருக்கலாம்.

வரலாற்று வல்லுநர் மால்டின், சீனர்கள் பிறர் தப்பிக்கவும் உதவி செய்ததாக தெரிவிக்கிறார். ஃபாங் லாங், முதலில் ஒரு மிதக்கும் மரக் கதவை அவர் பிடித்து கொண்டார். பின் அதன்மூலம் உயிர் காக்கும் படகில் ஏறி பிறரும் அதனுள் ஏற வகை செய்துள்ளார்.

விபத்திற்கு பிறகு என்ன நடந்தது?


அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டப்பின் அந்த ஆறு பேரும் கியூபாவிற்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் பிரிட்டன் சென்றனர். அப்போது பிரிட்டிஷ் கடலோடிகள் முதலாம் உலகப் போருக்கான ராணுவத்தில் இருந்ததால் கடலோடிகள் தட்டுப்பாடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாங் சிப் என்பவரின் உடல்நிலை அந்த இரவுக்கு பிறகு மிகவும் மோசமடைந்தது. அதன்பிறகு 1914ஆம் ஆண்டு அவர் நிமோனியாவால் உயிரிழந்தார். லண்டனில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதன்பிறகு ஐந்து பேர் 1920ஆம் ஆண்டு வரை பிரிட்டனில் பணிபுரிந்தனர். அந்த சமயத்தில் நாட்டில் போருக்கு பிந்தைய மந்த நிலையும், குடியேறிகளுக்கு எதிரான மனநிலையும் அதிகமாக இருந்தது.

சிலர் பிரிட்டன் பெண்களை திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றனர். இருப்பினும் குடியேறிகளுக்கு எதிரான கொள்கையால் அவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களை விட்டுவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.

“அது அவர்களின் தவறல்ல. இந்த குடும்பங்கள் அரசியலால் பிரிக்கப்பட்டன. அவர்கள் கையறுநிலையில் இருந்தனர்.” என்கிறார் ஜோன்ஸ்.

ஆ லாம் ஹாங் காங்கிற்கு அனுப்பப்பட்டார். லிங் ஹீ இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு நீராவி கப்பல் ஒன்றில் வந்தார்.

லி பிங் கனடாவில் குடியேறினார். ஃபாங் லாங் பிரிட்டனுக்கும் ஹாங் காங்கிற்கும் பல வருட காலமாக கடற்பயணம் மேற்கொண்டு தன்னை ஒரு காலத்தில் நிராகரித்த அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றார்.

வரலாறும் தற்போதைய சூழலும்
ஃபாங் லாங்கின் மகன் டாம் ஃபாங், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்தார். கிட்ட்தட்ட டைடானிக் மூழ்கி அரை நூற்றாண்டுக்கு பிறகு அவர் பிறந்தார். இவர்களின் குடும்ப பெயர் ஆங்கிலத்தில் பல்வேறு விதமாக எழுதப்படுகிறது.

பல தசாப்தங்களாக அவருக்கு அவரின் தந்தைக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து தெரிந்திருக்கவில்லை. “அவர் என்னிடம் இதுகுறித்து பேசியதில்லை. என் தாயிடம் கூட இதுகுறித்து பேசியதில்லை” என்று பிபிசியிடம் தெரிவித்தார் டாம்.

ஃபாங் தனது 90ஆவது வயதில் 1985ஆம் ஆண்டு காலமானார். அவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் டாம் ஃபாங்கிற்கு தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் மூலம் அவரது தந்தை தப்பிப் பிழைத்த கதை தெரியவந்துள்ளது.

தனது தந்தைக்கு இருந்த அச்சத்தாலும், அவர்பட்ட துயரத்தாலும் அவர் தன்னிடம் இதை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்கிறார் டாம்.

‘தி சிக்ஸ்’ படத்தின் ஆராய்ச்சி குழு தப்பி பிழைத்தவர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்டபோது, ஒரு நூற்றாண்டுக்கு முன் தங்களது குடும்பம் அனுபவித்த துயரத்தால் இந்த கதையைச் சொல்ல மறுத்துவிட்டனர்.

அமெரிக்காவில் வளர்ந்த டாம் ஃபாங், தனது தந்தை பல இனபாகுபாடு பிரச்னைகளை சந்தித்ததை பார்த்ததாக சொல்கிறார். ஒருமுறை தனது தந்தையை ஒருவர் இழிவான பெயர் வைத்து அழைத்ததாகவும் அதனால் தனது தந்தை அவரை தாக்கியதையும் தான் பார்த்ததாக அவர் கூறுகிறார்.

“தனது இனத்தால் தான் இழிவுபடுத்தப்படுவதாக ஃபாங் உணரும் வரை அவர் சாந்தமான ஒரு மனிதராகதான் இருந்தார்,” என தனது தந்தை குறித்து கூறுகிறார் டாம்.

இந்த சம்பவங்கள் நடந்து நூறு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் அமெரிக்காவில் பெருந்தொற்று காலத்தில் அதிகரித்துள்ள ஆசிய மக்களுக்கு எதிரான மன்பான்மை அதன் நீட்சியாகவே இன்றும் உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் சமீப மாதத்தில் ஆயிரக்கணக்கான இன பாகுபாடு சம்பவங்கள நடந்துள்ளன. இதில் தகாத வார்தைகளைப் பேசுவதிலிருந்து வன்முறை பிரயோகம் வரை அடங்கும்.

உண்மையாக என்ன நடந்தது என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் டாம் தனது கதையை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார். மேலும் தற்போதைய சம்பவங்களுடன் அதை பொறுத்தி பார்க்கவும் இது உதவும் என்கிறார்.

“ஏனென்றால் உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றால், அது நிச்சயம் மீண்டும் நிகழும்” என்கிறார் டாம்.

CLICK TO CALL இந்தியா vs இலங்கை டி 20
இலங்கைT20 சம்மரி லைவ்